×

வறட்சியால் பாதிக்கப்பட்ட மாமரங்கள் கணக்கெடுப்பு

கிருஷ்ணகிரி, மே 3: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மா மரங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 35ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் மானாவாரியாக 90 சதவீதமும், இறவை சாகுபடியாக 10 சதவீதமும் மா சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் மல்கோவா, அல்போன்சா, செந்தூரா, பீத்தர், பெங்களூரா உள்ளிட்ட 30 வகையான மா ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு லட்சத்து 30ஆயிரம் மெட்ரிக் டன் மாம்பழம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதில் தோத்தாபுரி, அல்போன்சா, பெங்களூரா வகை மாம்பழங்கள் மூலம் மாங்கூழ் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஏற்றுமதியில், 75 சதவீதம் வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, குவைத், ஏமன் போன்ற நாடுகளுக்கும், 15 சதவீதம் ஐரோப்பா நாடுகளுக்கும், 10 சதவீதம் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு சுமார் ₹600 கோடி அளவிற்கு அந்நிய செலாவணியாக வருவாய் கிடைக்கிறது.

இந்நிலையில், இவ்வாண்டு கடும் வறட்சியின் காரணமாக, 90 சதவீதம் மா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக மா விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நீர் நிலைகளை பொருத்தவரை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 89 ஏரிகளும், ஊராட்சி கட்டுப்பாட்டில் 1160 ஏரிகளும், 57 ஆயிரத்து 459 கிணறுகளும் உள்ளது. இதில் 90 சதவீத ஏரிகளும், 70 சதவீத கிணறுகளும் வறண்டு போய் உள்ளது. இதனால் விவசாயிகள் தங்களது மாந்தோட்டத்திற்கு டிராக்டர் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி வருகின்றனர். ஒரு டிராக்டர் தண்ணீர் ₹700 வீதம், ஏக்கருக்கு ₹3500 கொடுத்து தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இதன் மூலம் ஒரு ஏக்கர் மாமரங்களை பாதுகாக்க ₹15ஆயிரம் செலவிடப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மா விவசாயத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். கடந்த 6 மாதங்களாக மழையின்றி, கடும் வெயில் காரணமாக மா மகசூல் வெகுவாக பாதிக்கப்பட்டு, மாமரங்கள் காய்ந்து வருகிறது. இதனால் மா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதனை தொடர்ந்து, மகசூல் பாதிப்பு, காய்ந்த மரங்களை கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்படும் எனவும், அதன் அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என கலெக்டர் சரயு தெரிவித்திருந்தார். அதன்படி, பர்கூர் வட்டாரத்திற்கு உட்பட்ட போச்சம்பள்ளி, மகாதேவகொல்லஅள்ளி, காட்டகரம், சந்தூர், வெப்பாலம்பட்டி, சிகரலப்பள்ளி, புலிகுண்டா, பிஆர்ஜி மாதேப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், வறட்சியால் காய்ந்த மாமரங்களை கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியுள்ளது. கேவிகே சிறப்பு விஞ்ஞானி ரமேஷ்பாபு தலைமையில், வட்டார புள்ளியியல் ஆய்வாளர் சாந்தி, தோட்டக்கலைத்துறை அனுசுயா உள்ளிட்டோர் வறட்சியால் பாதிக்கப்பட்ட மா மரங்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அலுவலர்கள் கூறுகையில், ‘மாவட்டத்தில் பர்கூர், போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி வட்டாரங்களில் மகசூல் பாதிப்பு, காய்ந்த மா மரங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அறிக்கை தயார் செய்து கலெக்டரிடம் வழங்கப்படும்,’ என்றனர்.

The post வறட்சியால் பாதிக்கப்பட்ட மாமரங்கள் கணக்கெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED ஆடு, மாடு, கோழிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க தடுப்பு முறைகள்